திமோர் லெஸ்தே நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை: பிரதமர் அன்வார் கௌரவிக்கப்பட்டார்

கோலாலம்பூர்:
மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் இரண்டாவது நாளில், திமோர் லெஸ்தே நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.
திமோர் லெஸ்தே தேசிய நாடாளுமன்றத்தின் தலைவர் மரியா ஃபெர்னாண்டா லே அம்மையாரால் வரவேற்கப்பட்ட அன்வார், அவரது அலுவலகத்தில் ஒரு சிறிய சந்திப்பிற்குப் பிறகு, காலை 9 மணிக்கு தனது உரையை வழங்கினார். மலேசியா மற்றும் திமோர் லெஸ்தே இடையிலான இருதரப்பு உறவுகளில் அதிகரித்து வரும் நம்பிக்கை மற்றும் இணக்கத்தை இந்தச் சிறப்பு மரியாதை பிரதிபலிக்கிறது.
பிரதமர் தனது சக பிரதமர் கேய் ராலா சனானா குஸ்மாவோவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்த அரச அரண்மனைக்குச் சென்றார். அந்தச் சந்திப்பில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
டிலி துறைமுகத்தில் சர்வதேச மாநாட்டு மையம் (ICC) கட்டுமானத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இது திமோர் லெஸ்தேவின் பெரிய அளவிலான சர்வதேச நிகழ்வுகளை நடத்தும் திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 22 ஆண்டுகளில் ஒரு மலேசிய தலைவர் திமோர் லெஸ்தே நாட்டிற்கு மேற்கொண்ட முதல் பயணமான இந்த இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் அமைந்துள்ளது.
📰 செய்தி: வீர சின்னையன்















