போர்டிக்சன் நகரின் பெயரை மாற்ற அவசியம் எதுவும் இல்லை: தியோங் கிங் சிங் விளக்கம்

சிரம்பான்:செப்டம்பர் 23. 2025
போர்ட்டிக்சன் நகரின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரைக்கு மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் தியோங் கிங் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார். நகரின் பெயரை மாற்றினால் அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“சுற்றுலாத்துறைக் கண்ணோட்டத்தில், பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதைவிட பல முக்கியமான பிரச்சனைகள் உள்ளன. பெயரை மாற்றினால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இது ஒரு புதிய இடம் என்று நினைத்து, இங்கு வருகை தருவதில் ஆர்வம் காட்டாமல் போகலாம். ஆனால், இந்த இடம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது,” என்று குறிப்பிட்டார்.
போர்ட்டிக்சன் நகரின் பெயரை பந்தாய் டர்மகா என மாற்ற வேண்டும் என்று சில தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால், மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹருன் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடற்கரைகளுக்குப் பிரபலமான இந்த நகரம், பெயர் மாற்றம் செய்யுமளவுக்கு பிரபலமான இடம் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், இந்த நகரம் பல ஆண்டுகளாகவே சிறந்த சுற்றுலாத் தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெயர் மாற்றம் குறித்து மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் தியோங், “பெயர் மாற்றுவதை சமூக வலைத்தளங்களில் அறிவித்தாலும், அனைவரும் அதைப் படிக்க மாட்டார்கள்,” என்று குறிப்பிட்டார்.
மலேசிய சுற்றுலா கூட்டமைப்பு (MTF) தலைவர் ஸ்ரீ கணேஷ் கூறுகையில், பெயர் மாற்றம் செய்வதால் சுற்றுலாத்துறைக்கான அங்கீகாரம் குறையும் என்றும், முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறையும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தவும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் அந்தப் பகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“செய்தி: வீர சின்னையன்”















