
கோலாலம்பூர், 20 செப்டம்பர் (வெள்ளி) – ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இந்தியாவின் நீண்ட தூரப் பயணத்தை முடித்து, உலகின் உயர்ந்த சாலையான Umling La Pass-ஐ அடைந்த முதல் மலேசியர் என்ற பெருமையை கோலாலம்பூரைச் சேர்ந்த தமிழர் ராமகிருஷ்ணா பெற்றுள்ளார்.
SHADOWFAX MC மோட்டார் சைக்கிள் கிளப்பின் தலைவராக இருக்கும் ராமகிருஷ்ணா, தனது குழுவினருடன் இணைந்து இந்த ஆபத்தான மற்றும் சவாலான பயணத்தை நிறைவு செய்துள்ளார். இப்பயணத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் மலைப்பகுதிகள் வழியாக 38 நாட்கள் பயணித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பயண அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், “இது மன உறுதியும், உடல் சக்தியும் தேவைப்படும் கடினமான சாதனை. எனது கனவுகளில் ஒன்றை இன்று நிறைவேற்றியதில் பெருமை அடைகிறேன்” எனக் கூறினார்.
இந்த சாதனைக்காக ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் Route 77 Harley-Davidson, கோலாலம்பூர் கிளையில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும், மலேசிய சாதனைப் புத்தகத்தில் தனது பெயர் இடம் பெற்றிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். “இது எனது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, மலேசியர்களின் பெருமை. குறிப்பாக தமிழர் சமூகத்தின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இச்சாதனையால் உலகளாவிய அளவில் மலேசிய மோட்டார் சைக்கிள் சவாரியாளர்களுக்கு புதிய உந்துதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(பெர்னாமா)















