சூரிய சக்தி லஞ்சம்: நீதிபதி விலகக் கோரிய ரோஸ்மா மன்சூர் மனு தள்ளுபடி

புத்ராஜெயா:
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சரவாக் கிராமப்புறப் பள்ளிகளுக்கான கலப்பின சூரிய சக்தி திட்ட ஊழல் வழக்கில், தீர்ப்பளிப்பதில் இருந்து நீதிபதி டத்தோ முகமது ஜைனி மஸ்லான் விலக வேண்டும் என்று கோரி முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதியரசர் டத்தோ அஹ்மத் ஜைதி இப்ராஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த மேல்முறையீட்டில் எந்தவித தகுதியும் இல்லை என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது.
“எனவே, உயர் நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் உறுதிசெய்கிறோம்,” என்று டத்தோ அஹ்மத் ஜைதி இப்ராஹிம், நீதியரசர்கள் டத்தோ அஸ்மான் அப்துல்லா மற்றும் டத்தோ நூரின் பதாருடின் ஆகியோருடன் அமர்ந்திருந்தபோது அறிவித்தார்.
தற்போது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் முகமது ஜைனி, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தீர்ப்பு கசிந்ததாகக் கூறி அவர் விலக வேண்டும் என்று 74 வயதான ரோஸ்மா மனு தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக, 2022 செப்டம்பர் 1 அன்று, அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த முகமது ஜைனி, ரோஸ்மா மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், RM970 மில்லியன் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது
News Veera Sinnayen















