தமிழ்நாட்டின் கொடைக்கானலில் நிகழ்ந்த சாலை விபத்து: 12 மலேசியர்கள் பாதிப்பு- விஸ்மா புத்ரா உறுதி

கோலாலம்பூர்:
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், கொடைக்கானலில் கடந்த முன்தினம் பிற்பகல் நடந்த சாலை விபத்தில் சிக்கிய 12 மலேசியக் குடிமக்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் ஓர்அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய அனைத்துப் பயணிகளுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், பலருக்கு லேசான காயங்களும், நான்கு பேருக்குக் கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ள போதிலும், அவர்கள் சீராக உள்ளனர் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மலேசிய வெளியுறவு அமைச்சகம், சென்னையில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
பெறுத்தப்பாரை பகுதியில் மலைப்பாதையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, விஸ்மா புத்ரா, இந்தியாவில் உள்ள மலேசியர்களை மழைக்காலங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
News Veera Sinnayen















