பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு 3.0

கருஞ்சட்டை இளைஞர் படை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்திய பன்னாட்டு இளைஞர் பகுத்தறிவு கருத்தரங்கு, மூன்றாம் முறையாக, தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாளினை முன்னிட்டு இவ்வாண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. திராவிட மற்றும் பெரியார் சிந்தனையின் தேவை மலேசிய சமுதாயத்தில் அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முறை கருத்தரங்கு இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் 17/9/2025 இணையவழி நிகழ்ச்சி ஒன்றும், 21/9/2025 மலேசிய தலைநகரில் நேரடி நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
17 செப்டம்பர் 2025 – இணையவழி நிகழ்வு.
இதில் சிறப்பு பேச்சாளராக மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி “பெரியாரும் தமிழ்த்தேசியமும்” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
“தாய் மொழி எதற்கு? தமிழ் மொழி எதற்கு?” எனும் தலைப்பில் மலேசிய தமிழ்நெறிக் கழகத்தின் தலைவரும், வேர்ச்சொல் ஆய்வாளரும் ஆன இரா.திருமாவளவனார் உரை ஆற்றவுள்ளார்.
மேலும், உலகமயமாகும் பெரியார், பெரியார் மீதுள்ள விமர்சனங்கள், போர் போன்ற தலைப்புகளில் உரையாற்ற தமிழ்நாடு, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையிலிருந்து பேச்சாளர்கள் இணையவழி இணைவர்.
மலேசிய நேரம் இரவு 8.30 மணிக்குத் தொடங்கும் இக்கருத்தரங்கு கருஞ்சட்டை இளைஞர் படையின் முகநூல் பக்கத்தில் (fb.com/myperiyar) நேரலையாக ஒளிப்பரப்பப்படும்.
21 செப்டம்பர் 2025 – தலைநகரில் அமைந்துள்ள கோலாலும்பூர்-சிலாங்கூர் சீன மண்டபத்தில் (KLSCAH), பொதுமக்கள் கலந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் தேசிய மொழியில் கருத்தரங்கு நடைபெறும். முதல் அமர்வு மலாய் மொழியில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து, மதிய உணவுக்குப் பிறகு இரண்டாம் அமர்வு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை தமிழ் மொழியில் நடைபெறும்.
முதல் அமர்வில் மலேசியர்களிடயே வலுத்துள்ள மத இன நல்லிணக்கச் சிக்கல்களை மாற்று சிந்தனையின் வழி எவ்வாறு கையாளலாம் என்பது குறித்த கருத்துச் செறிவான கலந்துரையாடல் மலாய்மொழியில் நடைபெறும். களப்பணியாளர்கள் நூருல் அஃப்ரினா, இயவ் சாங் யென், வரலாற்று ஆய்வாளர்கள் அர்மண்ட் அச்ரா, சர்மினி ஆகியோர் கலந்து கொள்ளும் இக்கலந்துரையாடலை, தோழர் இளையபாரதி நெறிபடுத்துவார்.
இரண்டாம் அமர்வில், மலேசிய இந்திய சமூகத்தில் நிலவும் சாதிய மனநிலை, பாலின பாகுபாடுகள், மற்றும் அண்மையில் இளைஞர்களிடையே வலுத்து வரும் மத-இன தீவிரவாத போக்குகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் தமிழ் மொழியில் நடைபெறவுள்ளன. தன்னார்வ ஆய்வர் சாமிநாதன், ஊடகவியலாளர் இளவேனில், களப்பணியாளர் கௌசல்யா ஆகியோர் கலந்துரையாடும் இந்நிகழ்ச்சியினை, தோழர் ஹேகபிஷேக் குமார் நெறியாளராக நடத்தி வைப்பார்.
பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகக் கலந்து பயன்பெற வேண்டுமெனக் கருஞ்சட்டை இளைஞர் படையினர் அன்போடு அழைக்கிறோம்.



மேல் விவரங்களுக்கு,
தோழர் நாகேன் : 016-5910564
தோழர் யோகி : 016-5432572
தோழர் கௌசல்யா : 011-36321725















