ஆசியான் வட்டாரத்தில் மலேசியா செல்வாக்குமிக்க நாடாக இருக்க வேண்டும்- பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை
கூச்சிங்:
மலேசியாவின் தலைமைத்துவமும், மக்களும் இணைந்து கவனம் செலுத்தினால், மலேசியா ஆசியான் வட்டாரத்தில் தொடர்ந்து ஒரு வலுவான, செல்வாக்குமிக்க நாடாக உருவெடுக்க அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
சராவாக் மாநிலத்திற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின்போது, சமூகத்தினருடன் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். அமைச்சரவை உறுப்பினர்களின் வலுவான ஆதரவு, தெளிவான திட்டமிடல் மற்றும் ஆசியான் நாடுகளின் தலைவர்களுடன் உள்ள நல்லுறவு ஆகியவற்றின் காரணமாகவே, மலேசியா தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்க முடிந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
“கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்கள் எனக்கு நம்பிக்கையான நண்பர்கள்” என்று அவர் கூறினார். மலேசியா அமைதிக்கான ஒரு பாலமாக செயல்படவும், பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் திறன்பெற்றுள்ளது என்பதற்கு இந்த நம்பிக்கை ஒரு சான்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், சராவாக் பிரதமர் டத்தோ பாத்திங்கி டான் ஸ்ரீ அபாங் ஜொஹாரி துன் ஓபெங் மற்றும் மாநில அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோரும் உடனிருந்தனர்.
News Veera Sinnayen
















