டங் வாங்கி சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம்? – உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு முழு விசாரணைக்கு உத்தரவு

கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் உள்ள Kampung Sungai Baru-வில் நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும்போது டங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் காயமடைந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சமூகத்தில் பதற்றம் மற்றும் அமைதியின்மையை உருவாக்க வேண்டுமென்ற உள்நோக்கத்துடன், அரசியல் ரீதியான ஆதாயம் தேடும் நபர்கள் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்பதை கண்டறியவே இந்த விசாரணை என்று அவர் தெரிவித்தார்.
அந்தச் செயலை கடுமையாக கண்டித்த அமைச்சர், “அவர்கள் பொதுமக்களுக்காகப் போராடுவது போல் தோன்றினாலும், உண்மையில் தவறான தகவல்களைப் பரப்பி, மக்களிடையே வன்மத்தையும் வெறுப்பையும் தூண்டிவிடுகின்றனர்” என்று கூறினார்.
அம்மாநிலத்தின் மலாக்கா மாநகரில் நடந்த ஆசியான் எல்லை தாண்டிய குற்றங்களுக்கான அமைச்சர்கள் சந்திப்பு (AMMTC) தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு பேசினார். இதுபோன்ற நபர்களின் சூழ்ச்சிகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
news – VEERA SINNYEN















